search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் கணவர் கொலை"

    தக்கலை அருகே கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருந்ததை கணவர் பார்த்ததால் அவரை கொலை செய்தோம் என்று கைதான மனைவி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    நாகர்கோவில்:

    தக்கலை அருகே பள்ளியாடி பேராணி விளையைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40), கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி சுதா.

    இவர்கள் இருவரும் 2002-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ராஜசேகர் வெளிநாட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு ஊருக்கு வந்திருந்த அவர், திடீரென மாயமானார். இது குறித்து சுதாவின் சகோதரர் ரவி, தக்கலை போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 11 ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் திருப்பமாக ராஜசேகரை அவரது மனைவி சுதா மற்றும் அவரது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

    கொலை செய்யப்பட்ட ராஜசேகரின் உடலை வீட்டின் பின்புறம் உள்ள செப்டிக்டேங்க்கில் வீசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் செப்டிக்டேங்க்கில் கிடந்த எலும்புக்கூட்டை கைப்பற்றினர். பின்னர் தடயவியல் சோதனைக்காக பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர்.

    சோதனையில் அந்த எலும்புக்கூடு ராஜசேகருடையது என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் ராஜசேகரின் மனைவி சுதாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுதா போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    நானும், ராஜசேகரும் கடந்த 2002-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பிறகு ராஜசேகரின் நண்பர்கள் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். இதில் பள்ளியாடியைச் சேர்ந்த ஆன்லின் சிபுவும் அடிக்கடி வந்து சென்றார். அவருக்கும் எனக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    நாங்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். ஆன்லின் சிபுவுடன் நான், நெருக்கமாக இருந்ததை எனது கணவர் நேரில் பார்த்து கண்டித்தார். இதனால் அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தோம். கடந்த 9.2.2007-ம் ஆண்டு மதுவில் தூக்க மாத்திரை களை கலந்து கொடுத்தோம்.

    பின்னர் அரிவாளால் வெட்டியதுடன், தலையணையால் அமுக்கி கொன்றோம். வீட்டின் செப்டிக் டேங்க்கில் ராஜசேகர் உடலை வீசினோம். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் இருந்தோம். ராஜசேகரை சிலர் தேடினார்கள். அப்போது அவர் வெளிநாடு சென்று விட்டதாக கூறி நாடகமாடினேன்.

    எனது சகோதரருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டு விட்டது. இது தொடர்பாக எனக்கும், அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அவரை தாக்கியது தொடர்பாக தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் என்மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது சிக்கிக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட சுதாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர், தக்கலை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த கொலை வழக்கில் சுதாவின் கள்ளக்காதலன் ஆன்லின் சிபு உள்பட 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. ஆன்லின் சிபு தற்போது கேரளாவில் தலைமறைவாகி உள்ளார். மற்றொருவர் வெளிநாட்டில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

    ×